மூன்று முறை போனை அசைத்தால் போலீசார் 'பறந்து' வந்து உதவுவார்கள்: முதியோருக்கு போலீஸ் கமிஷனர் தைரியம்

கோவை, ; மூன்று முறை அசைத்தாலே ஆபத்து நேரத்தில் உதவும் காவல் செயலியை பதிவிறக்கம் செய்ய, தனியாக இருப்பவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகரில், சரவணம்பட்டி, வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதியவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இவ்வாறு முதியவர்கள் தனியாக உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை அலாரம் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியாக இருப்பவர்கள், 'காவல்' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''தனியாக உள்ள முதியவர்கள் குறித்த தகவல்கள் அனைத்து திரட்டப்பட்டுள்ளன. தனியாக முதியோர் வசிக்கும் பகுதிகளில் போலீஸ்காரர், முதியோரிடம் தொடர்ந்து பேசி நட்பை ஏற்படுத்திக் கொள்வார். முதியவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

ஆபத்து எனும் போது, தொடர்பு கொள்ள இது உதவும். இதுதவிர, காவல் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துகிறோம். செயலியை திறந்து புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனை மூன்று முறை, வேகமாக அசைத்தாலே எங்களுக்கு தகவல் வந்து விடும். இதுவரை, 25 ஆயிரம் பேர் காவல் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். நடப்பாண்டு இச்செயலி வாயிலாக, 179 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தனியாக உள்ளோரின் வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

Advertisement