கார், பஸ், லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தின் நால்வர் பலி

விஜயபுரா: கர்நாடகாவின் விஜயபுராவில், நேற்று அதிகாலை கார், தனியார் பஸ், லாரி மோதிய விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், கதவாலில் உள்ள கனரா வங்கி கிளையின் மேலாளர் பாஸ்கரன். இவர், தன் மனைவி பவித்ரா, மகள் ஜோஸ்னா, மகன்கள் அபிராம், பிரவீன் தேஜ் ஆகியோருடன், கர்நாடகாவின் முருடேஸ்வராவுக்கு, 'மஹிந்திரா எக்ஸ்.யு.வி., 300' காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை, விகாஸ் சிவப்பா மகானி என்பவர் ஓட்டினார். பசவன பாகேவாடியின் மனகுலி டவுன் அருகில் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று காலை 6:15 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி, எதிர்ப்புற சாலையில் பாய்ந்தது.

அப்போது, மும்பையில் இருந்து பல்லாரிக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் மீது கார் மோதி, சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த பாஸ்கரன், பவித்ரா, ஜோஸ்னா, அபிராம், கார் ஓட்டுநர் விகாஸ் சிவப்பா மகானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதற்கிடையில், கார் மீது மோதிய ஆம்னி பஸ்சும் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது. இதில், பஸ் ஓட்டுநர் பசவராஜ் ராத்தோட் உயிரிழந்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் இறங்கினர். காருக்குள் இருந்த பாஸ்கரனின், 10 வயது மகன் பிரவீன் தேஜ், லாரி ஓட்டுநர் சன்னபாசு சித்தப்பா மாலி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இருவரும் விஜயபுரா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement