காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

20

ஜெனீவா: காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், போரை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.




பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு ஆண்டுகளை நெருங்கி நடந்து வரும் இந்தப் போரில், காசாவில் 53,475 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


மோதலை நிறுத்தும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டியதால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது.


இந்த நிலையில், காசாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், காசா மீது கொஞ்சம் கருணை காட்டும்படியும் இஸ்ரேலிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: காசாவில் இருக்கும் மக்களின் தற்போதைய மனநிலையை என்னால் உணர முடிகிறது. நான் அதைப் பார்க்கிறேன். அந்த சத்தங்களும் எனக்கு கேட்கிறது. மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். உணவையும், மருத்துவப் பொருட்களையும் ஆயுதமாக்குவது மிகவும் தவறு.


அரசியல் தீர்வு மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும். இந்தப் போரினால் இஸ்ரேலும் பாதிக்கிறது. உங்களால் கருணை காட்ட முடியும் என்றால், அது உங்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே நல்லது, எனக் கூறினார்.

Advertisement