ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் மலைக்குறவன் மக்கள் தவிப்பு

சென்னை:'ஹிந்து - மலைக்குறவன் பழங்குடி ஜாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பித்து ஓராண்டாகியும், வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை' என, அந்த சமூகத்தினர் புகார் கூறுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மலைக்குறவன் சமூகத்தினர் சிலர் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கூட்டார் கிராமப்பகுதியில், 15,000க்கும் மேற்பட்ட மலைக்குறவன் சமூகத்தினர் வசித்து வருகிறோம். இவர்களில், 50 சதவீதம் பேரிடம் ஜாதி சான்றிதழ் கிடையாது. சான்றிதழ் பெற விண்ணப்பித்தாலும், இங்குள்ள வருவாய் துறை அதிகாரிகள் காரணம் சொல்லாமல் ரத்து செய்கின்றனர்.

இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'மலைக்குறவன் சமூகத்தினர், காடு அல்லது மலைப்பகுதியில் வசிப்பவர்கள். நிலப்பகுதியில் வசிப்போருக்கு சான்றிதழ் தர இயலாது' என்கின்றனர்.

மொத்தமுள்ள, 37 வகை பழங்குடியினர் பிரிவில், மலைக்குறவன், நரிக்குறவர், ஆதியன் உள்ளிட்ட சமூகத்தினர், 30 ஆண்டுகளுக்கு முன்பே, கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட காரணத்திற்காக, நிலப்பகுதிக்கு வந்து விட்டனர். அவ்வாறு வந்தவர்கள், அரசின் எந்த நலத் திட்டங்களையும் பெற முடியாமல் இருப்பதற்கு, சான்றிதழ் கிடைக்காமல் இருப்பதுதான் காரணம்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளனர். சான்றிதழ் கிடைக்காததால், எங்கள் பிள்ளைகள் பலரும் உயர்கல்வி படிக்க முடியாமல் உள்ளனர். மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement