பொன்னேரி - பழவேற்காடு சாலையில் வளைவுகளை விரிவுபடுத்த கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், போலச்சியம்மன்குளம் பகுதியில் இருந்து, பசியாவரம் பாலம் வரை, 10க்கும் மேற்பட்ட சாலை வளைவுகள் உள்ளன. இவற்றில், ஆண்டார்மடம் பகுதியில் மட்டும் வளைவுப்பகுதி, கடந்தாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

மற்ற இடங்களில் உள்ள ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது தடுமாற்றம் அடைகின்றன. எதிரெதிரே வாகனங்கள் ஒரே நேரத்தில் வளைவில் திரும்பும்போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆண்டார்மடம் வளைவு பகுதியை போன்று, மற்ற இடங்களிலும் சாலை வளைவுகளை விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றன. அப்போது, சாலை வளைவில் திரும்பும்போது, வேகத்தை குறைக்காமல் திரும்பும் போது, அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. மேலும், சாலை வளைவுகளில் போதிய எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்படவில்லை.

சாலையின் இருபுறமும் தாழ்வான கழிமுக பகுதிகள் உள்ளன. சிறிது கவனம் சிதறினாலும், பெரிய அளவிலான அசம்பவாதங்கள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, வளைவுகளை விரிவாக்கம் செய்யவும், போதிய எச்சரிக்கை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement