பெண் கைதியை ஹோட்டலில் தங்கவைத்த எஸ்.ஐ., சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்:மோசடி வழக்கில் கைதான பெண்ணை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்க வைத்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டில் பார்சலோனாவில் எம்.பி.பி.எஸ்., படிக்க 'சீட்' வாங்கித் தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தில் பலரிடம், ஒரு கும்பல் லட்சக்கணக்கில் பணமோசடி செய்தது.

திருவனந்தபுரம் வழுதைக்காட்டை சேர்ந்த ஒருவர், அக்கும்பல் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மியூசியம் போலீசில் புகார் செய்தார்.

மோசடி செய்தது அர்ச்சனா கவுதம் என்ற பெண் என்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது. அவர் வேறொரு மோசடி வழக்கில் கைதாகி, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து எஸ்.ஐ., ஷெபின் தலைமையிலான போலீசார் ஹரித்துவார் சென்று, அவரை காவலில் எடுத்து அழைத்து வந்தனர்.

அவரிடம் விசாரித்து, திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் ஹரித்துவார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், எஸ்.ஐ., ஷெபின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், இரண்டு நாட்கள் டில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருந்தார். அதன் பிறகே, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது தெரிந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர், ஷெபினை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement