ஆன்லைன் சூதாட்ட விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்ட ஆப்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கே.எ.பால் என்பவர் தாக்கல் செய்த மனுவில்; ஆன்லைன் சூதாட்ட ஆப்களில் ஈடுபடும் நிறைய குழந்தைகள், தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த சூதாட்ட ஆப்களுக்கான விளம்பரங்களில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து, அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர்.


தெலங்கானாவில் மட்டும் இதுபோன்ற சூதாட்ட ஆப்களினால் 1,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெட்டிங் ஆப்களை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் மீது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, தெலங்கானாவில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன," இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


அவரது இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது; ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு ஆப்களினால் நிகழும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உங்களைப் போலத் தான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால், என்ன செய்வது. மக்கள் கொலை குற்றங்களில் ஈடுபடுவதை எப்படி தடுக்க முடிவதில்லையோ, அதேபோலத் தான், சட்டம் இயற்றுவதால் மட்டும் மக்கள் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது, என்று கூறினர்.


மேலும், இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

Advertisement