மக்காச்சோளம் அறுவடை ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, நெற்பயிர் மட்டுமே பிரதான விவசாயமாக உள்ளது. விவசாயம் என்பது நெல் சார்ந்து மட்டுமின்றி, அனைத்து சாகுபடி சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அதிக வருவாய் ஈட்டும் தன்னிறைவான விவசாயமாக இருக்க வேண்டும் என்பதற்கான சோதனை முயற்சியில், மாவட்ட வேளாண் துறையினர் இறங்கியுள்ளனர். அவர்கள் முன்னெடுப்பில், மாவட்டத்தில் 50 இடங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

பாராட்டு@

@

இதற்காக, அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 50 விவசாயிகளுக்கு சோதனை முறையில், தலா 1 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

இதை பெற்று ஆர்வமுடன் சாகுபடி செய்த, கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 42, அவசரம், 55, ஆகியோரது 2 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள், நன்கு விளைந்து அறுவடைக்கு காத்திருந்தன. இதன் அறுவடை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களில் இருந்தும், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், அறுவடை விழாவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மக்காச்சோள அறுவடையை கலெக்டர் துவக்கி வைத்தார். சிறப்பாக சாகுபடி செய்த விவசாயிகள் இருவரையும், கலெக்டர் பிரதாப் பாராட்டினார்.

ஆலோசனை



இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:

தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில், எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில், மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளது. தினமும் 500 டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. நம் மாவட்டத்தில் அருகிலே இத்தொழிற்சாலை இருப்பது, விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு.

வரும் காலங்களில் நெற்பயிர் மட்டுமின்றி, இடைத்தரகர்கள் இன்றி, நிலையான வருவாய் ஈட்டி தரும் மக்காச்சோளத்தையும் சாகுபடி செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இடுபொருட்கள் வழங்கல்




கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலையில் நேற்று, விவசாயிகளுக்கு மக்காச்சோளம் பயிரிடுவதற்கான இடுபொருட்கள் வழங்கப்பட்டன.தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடந்த விழாவில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சிறுதானிய துறை பேராசிரியர் மற்றும் தலைவரான சிவகுமார், எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலை இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 100 விவசாயிகளுக்கு, சோதனை அடிப்படையில் 1 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கான அனைத்து இடுபொருட்களும் வழங்கப்பட்டன. தொழிற்சாலை உற்பத்தியில் மக்காச்சோளத்தின் தேவை குறித்தும், நேரடி கொள்முதல் வசதி, நிலையான வருவாய் குறித்தும், எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலையின் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.மக்காச்சோளம் பயிரிட்டு பராமரிக்கும் முறை குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் டாக்டர் கதிர்வேலன், டாக்டர் சீனிவாசன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாகுபடியாளர் சண்முகம் ஆகியோர் விளக்கினர்.

Advertisement