நீட் அல்லாத படிப்புகளுக்கு 7,664 விண்ணப்பங்கள் குவிந்தன: பி.டெக்., படிக்க 2,612 பேர் ஆன்லைனில் பதிவு

புதுச்சேரி, நீட் அல்லாத படிப்புகளுக்கு இதுவரை 7,664 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கபதிவு செய்துள்ள சூழ்நிலையில், 5,247 பேர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் கடந்த 12ம் தேதி முதல் துவங்கியது.
மாணவ, மாணவிகள் போட்டிக் போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 7,664 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இ மெயில் மூலம் பதிவு செய்திருந்தனர். இதில் 5,247 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து இருந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 4,330 மாணவர்களும், பிற மாநிலங்களில் இருந்து 917 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பி.டெக்., டாப்
உயிரியல் சார்ந்த டிகிரி படிப்புகளுக்கு 1885 பேர், பி.பார்ம்-1603, அக்ரி- 872, பி.டெக்., - 2612, சட்டபடிப்பு- 489, டிப்ளமோ- 471, டி.ஏ.என்.எம்.,- 293 பி.வி.ஓ.சி.,- 376 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
யார் யார் விண்ணப்பிக்கலாம்
இம்மாதம் 31ம் தேதி வரை சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீட் அல்லாத யூ.ஜி., தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் விண்ணப்பிக்கலாம்.
கலை அறிவியல் படிப்புகள்
மேலும், ஆறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்.
பாரதியார் பல்கலைகூடம்
இதேபோல் பாரதியார் பல்கலை கூடத்தில் உள்ள பி.பி.ஏ., பி.வி.ஏ., உள்ளிட்ட நுண்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பிற மாநில மாணவர்கள்
இளநிலை நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கும் பிற மாநில ஒதுக்கீடு உள்ளது. எனவே, தகுதியான பிற மாநில மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர், ஓ.சி.ஐ., விண்ணப்பதாரர்களும் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுய நிதி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக காமராஜர் அரசு இன்ஜியரிங் கல்லுாரியில் உள்ள பி.டெக்., இடங்கள், மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி, புதுச்சேரி தொழில்நுட்ப கல்லுாரில் உள்ள ஜோஸா இடங்கள், பி.எஸ்சி., வேளாண்மை தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகள், பி.பார்ம் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
மேலும்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; பல மாநில முதல்வர்கள் பங்கேற்பு