நொய்யல் கரையோரத்தில் ஆக்கிரமிப்பை அனுமதிக்கலாமா?

திருப்பூர்; திருப்பூர் நொய்யல் கரையோர ரோட்டில், வாகனங்களை நிறுத்தி கடை அமைப்பது அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் யூனியன் மில் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதியை இணைக்கும் வகையில், புதிய நொய்யல் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்காக, பழைய ஈஸ்வரன் கோவில் வீதி பாலமும் இடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், அனைத்து வாகனங்களும், மின்மயானம் ரோடு, வளம் பாலம் மற்றும் நொய்யல் கரையோர ரோடுகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மங்கலம் ரோடு செல்ல வேண்டியவர்கள், வளர்மதிபாலம் வழியாக செல்லவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, யூனியன் மில் ரோடு சந்திப்பில் துவங்கி, வளம் பாலம் வரையில் புதிய கடைகள் முளைக்கத் துவங்கியுள்ளன. துவக்கத்தில், நொய்யல் கரையோர மழைநீர் வடிகாலின் மீது, சிறிய கடையாக இருந்தது, தற்போது பந்தல்கடைகளாக மாறிவிட்டன. இரவு நேரத்தில், ரோட்டில் வாகனங்களை நிறுத்தி, சிக்கன் தந்துாரி கடை இயங்குவதால், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேநேரம் பகலில் முழுவதும், இளநீர் வாகனங்கள், ரோட்டோரமாக நின்று விற்பனை செய்கின்றன. இதுவரை பிரச்னை இல்லை, ஈஸ்வரன் கோவில் வீதிபாலம் இடிக்கப்படுவதால், இனிமேல் மற்ற ரோடுகளில் போக்குவரத்து அதிகரிக்கும்; நெரிசலும் அதிகரிக்கும்.

இக்கட்டான நேரத்தில் ரோட்டோர கடைகள் இயங்குவதால், நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, புதிய பாலம் பணி முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் வரை, நொய்யல் கரையோர ரோடுகளில், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கடை அமைப்பதை, எவ்வித பாரபட்சமும் பாராமல், மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரம் தடுக்க வேண்டும் என்பதே, வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

இதேபோல், ஈஸ்வரன் கோவில் வீதியில், பூமார்க்கெட் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement