ரூ.30 லட்சம் மோசடி தபால் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல்:ரூ.30 லட்சம் மோசடி தொடர்பாக விசாரிக்க தபால் அலுவலகம் சென்ற அதிகாரிகளை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை செய்தனர்.

வத்தலகுண்டு அடுத்த தும்மலப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப். இவர் அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு, அனுப்பப்பட்டி கிராம தபால் நிலையங்களில் கிளை அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். நிரந்தர வைப்புக் கணக்கு, காப்பீடு, செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பொதுமக்கள் செலுத்திய ரூ.30 லட்சத்தை பிரதீப் மோசடி செய்ததாக 6 மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. இதனால் அவர் தலைமறைவானார்.

இவ்விவகாரம் குறித்து விசாரிக்க அனுமந்தராயன்கோட்டை, அனுப்பப்பட்டி கிளை அஞ்சலகங்களில் தபால் துறை அதிகாரிகள் நேற்று சென்றனர்.

இதை அறிந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முறைகேடு செய்த பிரதீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதலீட்டுப் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.

Advertisement