சுதந்திர பூங்காவில் என்ன உள்ளது  

பெங்களூரு சேஷாத்ரி சாலையில் சுதந்திர பூங்கா உள்ளது. இந்த பூங்கா தற்போது போராட்டம் நடத்தும் களமாக உள்ளது. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தினமும் இங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் சுதந்திர பூங்கா என்றாலே போராட்டம் நடத்தும் இடம் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. ஆனால் இந்த பூங்காவிற்குள் சில ஆச்சரியங்களும் உள்ளது. இந்த பூங்கா கடந்த 1970 கால கட்டத்தில் பெங்களூரு மத்திய சிறையாக இருந்தது.

கடந்த 1975ல் நாட்டில், அவசர நிலை அறிவிக்கப்பட்ட போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டனர்.

விசாரணை, வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டனர்.

பரப்பன அக்ரஹாராவில் சிறை அமைக்கப்பட்டவுடன் இங்கிருந்த கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர்.

தற்போதும் சுதந்திர பூங்காவிற்குள் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் சிற்பங்கள், லாக் அப்புகள் உள்ளன.

கண்காணிப்பு கோபுரம், சிறை மருத்துவமனை போன்றவற்றையும் இங்கு பார்க்க முடியும். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் துாக்கிலிடப்பட்ட இடமும் அங்கு உள்ளது. அந்த இடத்தை பார்ப்பது ஒரு பதற்றமான அனுபவமாக இருக்கும்.

பூங்காவிற்குள் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களும் உள்ளன. வரலாற்று கட்டடங்கள், வண்ணமயமான தோட்டங்களுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.


இந்த பூங்காவிற்குள் நுழைய கட்டணம் எதுவும் இல்லை. தினமும் காலை 5:00 மணி முதல் 8:30 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும். வாகன நிறுத்தும் இடமும் உள்ளது.

- -நமது நிருபர் - -

Advertisement