தள்ளாடும் 'இ - சேவை' மையங்கள்; 'சர்வர்' பிரச்னையால் தினமும் அவதி

சென்னை : தமிழகத்தில் உள்ள 'இ -சேவை' மையங்களில், தினமும் 'சர்வர்' பிரச்சனை ஏற்படுவதால், பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின், பல்வேறு திட்ட சேவைகளை, 'ஆன்லைன்' வழியே, பொதுமக்கள் எளிதாக பெற, தமிழக மின்னாளுமை முகமை, தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், மாநிலம் முழுதும் 10,400 அரசு 'இ - சேவை' மையங்கள் செயல்படுகின்றன.
இங்கு பிறப்பு, இறப்பு, வாரிசு, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் போன்ற சேவைகளைப் பெற விண்ணப்பிக்கலாம். அனைத்து சேவைகளுக்கும், தலா, 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.
இதற்கு, ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவை தேவை. இவற்றுக்கு விண்ணப்பிக்க, 'இ-சேவை' மையங்களுக்கு செல்கின்றனர். கடந்த சில நாட்களாக, தமிழகம் முழுதும் 'இ - சேவை' மையங்களில், 'சர்வர்' பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் மக்கள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:
என் மகனை கல்லுாரியில் சேர்க்க உள்ளோம். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்காக, தாம்பரத்தில் உள்ள இ - சேவை மையத்திற்கு, கடந்த 19ம் தேதி சென்றேன். அங்கிருந்த ஊழியர், 'சர்வர்' பிரச்னை என்றார். சரியாக எவ்வளவு நேரமாகும் எனக் கேட்டதற்கு, எந்த பதிலும் சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த பிரச்னை உள்ளது. இப்பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மின்னாளுமை முகமை அதிகாரியிடம் கேட்டபோது,'இ-சேவை மைய பிரச்னைகள் குறித்து, புகார்கள் வருகின்றன. சில நேரம் அரசு தகவல் மைய சர்வரில் பிரச்னை ஏற்படுகிறது. அது சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டு விடும். கடந்த சில தினங்களாக, 'பேக் எண்ட்' சர்வரில் பிரச்சனை நிலவுகிறது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.
தமிழக மின்னாளுமை முகமையின், வாடிக்கையாளர் சேவை மைய இலவச எண் 18004256000ல் 'இ - சேவை' மையங்கள் குறித்த புகார்களை அளிக்கலாம். ஆனால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் போது, பெரும்பாலும் 'பிஸி' என்றே வரும். போன் இணைப்பு கிடைத்தாலும், எதிர் முனையில், பதில் அளிக்க யாரும் முன்வருவதில்லை. போனை எடுப்பவர்கள், விசாரிக்கிறோம் என ஒற்றை வார்த்தை கூறி, போனை வைத்து விடுகின்றனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.




மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!
-
மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?
-
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு!
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!
-
மத்திய அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்!