இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள்

சென்னை: மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளை இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாற்ற, அதன் நிர்வாகங்கள் முயற்சித்து வருகின்றன.
அனுமதி:
தமிழகத்தில், 55 அரசு, 32 அரசு உதவிபெறும், 430 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், சிவில், மெக்கானிக்கல், விவசாயம், உற்பத்தி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கட்டுப்பாடு, தகவல் தொடர்பியல், கணினி பொறியியல், டெக்ஸ்டைல், கணினி பயன்பாடு, பயோ கெமிக்கல், பயோ மெடிக்கல், லாஜிஸ்டிக், ஆட்டோமொபைல், பிரின்டிங் தொழில்நுட்பம், இ.சி.ஜி., போன்ற பாடப்பிரிவுகளில், மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மொத்தம், 1.62 லட்சம் மாணவர்கள் படிப்பதற்கான இடங்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த போதும், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் சரிந்து வருகிறது. 2022 - -23ம் கல்வியாண்டில் 68,888; 2023- - 24 ம் கல்வியாண்டில், 63,561 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். கடந்த ஆண்டு, 58,426 இடங்கள் மட்டுமே நிரம்பின. மாணவர் சேர்க்கை குறைந்ததால், கடந்த ஆண்டு 17 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு, 15 பாலிடெக்னிக் கல்லுாரிகளை மூட, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
முடிவு:
இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், கன்னியாகுமரியில் 4; ஈரோடு, நாமக்கல், சென்னையில் தலா 2; திருப்பூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா ஒன்று என, மொத்தம், 15 பாலிடெக்னிக்குகளை மூட அனுமதி கோரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவு காரணம் என தெரிவித்து, அதற்கான ஆவணங்களை இணைத்துள்ளனர்.
ஏ.ஐ.சி.டி.இ., புதிய விதிமுறைகளின்படி, ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பை வேறு படிப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால், இந்த பாலிடெக்னிக் கல்லுாரிகள், பாலிடெக்னிக் உரிமத்தை ரத்து செய்து விட்டு, இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாற்ற முடிவு செய்துள்ளன. பொதுவாக, பாலிடெக்னிக் கல்வி முடித்ததும், பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்ஜினியரிங் படித்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால், மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர விரும்புகின்றனர். இது, பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு, முக்கிய காரணமாக உள்ளது.








மேலும்
-
நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி!
-
ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!
-
மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?
-
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு!
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!