நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!

22

வாஷிங்டன்: ''இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான வெள்ளை மாளிகை சந்திப்பின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்தம் தொடர்பாக பேசியுள்ளார்.

பின்னர் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
நாங்கள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் என்ன செய்தோம் என்று தெரியும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க நான் உதவினேன். நான் அதை வர்த்தகம் மூலம் தீர்த்து வைத்தேன். இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தராக இருந்தேன். வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் மூலம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை உருவாக்கினேன்.



அமெரிக்கா இரு நாடுகளுடனும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு சில சிறந்த மனிதர்களும், சிறந்த தலைவர்களும் கிடைத்துள்ளனர். இந்தியா எனது நண்பர். பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படுவதை நிறுத்திவிட்டேன் என டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. டிரம்ப் கூறுவதை இந்தியா நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement