அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே…

1





பராட்டு மழையில் நனைந்தபடி இருக்கிறார் ஜியா குமாரி.

பிகாரிலிருந்து புலம் பெயர்ந்து சென்னை வந்த ஏழை தொழிலாளியின் மகள் - அதுவல்ல அவரது சிறப்பு. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழ்ப் பாடப்பிரிவில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதுதான் அவரது உண்மையான சிறப்பு.

பிகாரைச் சேர்ந்த தனஞ்செய் திவாரி கட்டுமானத் தொழிலாளி. கல்வி இல்லாதவர். தனது சொந்த ஊரில் தொழில் அமையாததால், 2009 ஆம் ஆண்டு பிழைப்பு தேடி சென்னை வந்தார்.

இங்கு வந்தபோது வருமானம் குறைவாக இருந்தாலும், அது நிலையானதாக இருந்தது கொஞ்சம் பணம் சேர்ந்ததும் தனது மனைவி மற்றும் ரியா குமாரி, ஜியா குமாரி, சுப்ரியா குமாரி ஆகிய மூன்று மகள்களையும் ஊரில் சென்று பார்த்துவந்தார். ஆனால், அந்த செலவும் கட்டுப்படியாகமல் போகவே , ஒரு கட்டத்தில் மனைவி பிள்ளைகளை சென்னை அழைத்து வந்துவிட்டார்.
Latest Tamil News
சென்னை பல்லாவரம் கவுல்பஜார் பகுதியில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் தங்கி, வேலைக்கு செல்கிறார் . மகள்களை அருகிலுள்ள அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

“கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும். நம் குடும்பத்தின் கடைசி கட்டுமான தொழிலாளியாக நான் இருந்துவிட்டுப் போகிறேன். நீங்களாவது நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும்,” என்று அடிக்கடி கூறுவார்.

தனது கணவர் மற்றும் தனது சொற்ற சம்பாத்தியத்தில் ரீனாதேவி குடும்பத்தை நடத்துகிறார்.பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கிறார். உண்மையில் இவர் படிக்கவைக்கிறார் என்பதை விட மகள்கள் குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து நன்கு படிக்கின்றனர் என்பதே சரியாக இருக்கும்.இவர்களின் பொழுதுபோக்கே பாடப்புத்தகங்கள் படிப்பதுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது மகளான ஜியா குமாரிதான் தற்போது நாடு கொண்டாடும் நாயகி.

அரசுப்பள்ளியில் ஆங்கிலக்கல்வி பயிலும் ஜியா, தமிழ்ப் பாடப்பிரிவில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை நேரில் சந்தித்தபோது, சரளமாக தமிழில் பேசினார். பேசும்போது, “முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” என்பது போன்ற திருக்குறளைக் குறிப்பிட்டு பேசுகிறார்.

“ஊரிலிருந்து இங்கே வந்தபோது தமிழில் பேசுவது சிரமமாக இருந்தது. ஆனால் பின்னர் பழகிக்கொண்டேன். இப்போது தமிழ் எனக்குப் பிடித்தமான மொழியாகியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழில்தான் பேசுகிறேன், எழுதுகிறேன். அடுத்த பிளஸ் ஒன் பிரிவிலும் தமிழைத்தான் விருப்பப் பாடமாக எடுத்துக்கொள்வேன்,” “எனது மதிப்பெண்கள் அடிப்படையில் உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து, நீட் தேர்வு எழுதி மருத்துவராவதே எனது இலட்சியம்.” என்று கூறி தனது குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்.

“இங்கே தமிழகத்தில் படிப்பது என்பது எளிதும் இனிமையும் வாய்ந்த ஒன்று. எனது சாப்பாடு, துணி, காலணி, புத்தகம் — அனைத்தையும் அரசே வழங்கியது. ஆசிரியர்களும் அன்பாகச் சொல்லிக் கொடுத்தனர்,” என்றார்.

அதற்கேற்ப, அவருக்கு தமிழ் பாடம் கற்பித்த ஆசிரியை கீதா, “ஜியா குமாரியிடம் எப்போதும் ஒரு அதித ஆர்வம் உண்டு . ஒரு முறை சொன்னால் போதும் - கற்பூரம் போலப் பிடித்துக் கொள்வார். நமது தமிழ் மாணவர்களே திணறும் இலக்கிய, இலக்கணப் பகுதிகளை அநாயாசமாகக் கடந்து விடுவார்,” என்றார் பெருமையுடன்.

ஜியா குமாரியின் வீட்டிற்கு பள்ளி ஆசிரியர்களும், அந்தப் பகுதி பிரமுகர்களும் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கௌரவித்துள்ளனர்.

இது போதாது - தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களும், அமைச்சர்களும் ஜியாவைக் கொண்டாடவேண்டும்.

ஏனெனில், அவர் அந்த அளவிற்கு தமிழைத் உயர்த்திப் பிடித்துள்ளார்.

- எல். முருகராஜ்



Advertisement