தமிழகத்திற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

23

சென்னை: '' தமிழகத்திற்கு ஏன் கல்வி நிதியை ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் நாளை( மே 23) மதியத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை கல்வி உரிமைச் சட்டத்தில் வழங்குகிறது. 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 50 சதவீதம், தமிழக அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டும்.

தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தரவில்லை. 2021- 23 நிதியாண்டில் மத்திய அரசு நிதி தராத காரணத்தினால், 100 சதவீத நிதியை தமிழக அரசே ஏற்றது. மத்திய ஆளுங்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி.,க்கள் கூட இல்லாத காரணத்தினால், தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை.


மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டு உள்ளது. வரும் 28 ல் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடக்க உள்ளது என்றார்.


மத்திய அரசு வழக்கறிஞர், 'சில காரணங்களினால், தமிழகத்திற்கு நிதி வழங்கப்படவில்லை ' என விளக்கமளித்தார்.


இதனையடுத்து நீதிபதிகள், '' தமிழகத்திற்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்பது குறித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி குறித்தும் நாளை மதியம் 2:15 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement