ஆயுஷ் மாத்ரே, வைபவ் வாய்ப்பு: இந்திய ஜூனியர் அணியில்

புதுடில்லி: இந்திய ஜூனியர் அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். 14 வயதான 'பேட்டிங் புயல்' வைபவ் சூர்யவன்ஷியும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி (19 வயதுக்கு உட்பட்ட), 50 ஓவர் பயிற்சி போட்டி (ஜூன் 24), 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடர் (ஜூன் 27-ஜூலை 7), இரு நான்கு நாள் போட்டிகளில் (ஜூலை 12-15, ஜூலை 20-23) பங்கேற்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அனுபவம்: கேப்டனாக மகாராஷ்டிராவின் ஆயுஷ் மாத்ரே 17, நியமிக்கப்பட்டுள்ளார். பிரிமியர் தொடரில் ருதுராஜ் காயம் அடைந்ததால், சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்ற இவர், 6 போட்டிகளில் 206 ரன் எடுத்துள்ளார். 9 முதல் தர, 7 லிஸ்ட் 'ஏ' போட்டிகளில் 962 ரன் எடுத்துள்ளார். துணை கேப்டனாக மும்பையை சேர்ந்த விக்கெட்கீப்பர்-பேட்டர் அபிக்யான் அசத்த காத்திருக்கிறார். கேரள 'ஸ்பின்னர்' முகமது எனான் வாய்ப்பு பெற்றுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு யூத் டெஸ்டில் (19 வயது), 16 விக்கெட் வீழ்த்தினார். இத்தொடரில் 9 விக்கெட் சாய்த்த பஞ்சாப் 'ஸ்பின்னர்' அன்மோல்ஜீத் சிங்கும் இடம் பிடித்துள்ளார். பஞ்சாப் துவக்க பேட்டர் விஹான் மல்கோத்ரா, மேற்குவங்க வேகப்பந்துவீச்சாளர் யுதாஜித் குஹா, குஜராத் 'ஆல்-ரவுண்டர்' கிலான் படேல் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
வருகிறார் வைபவ்: தற்போதைய பிரிமியர் தொடரில் பட்டையை கிளப்பும் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இளம் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. சாம்சன் காயம் அடைந்த சமயத்தில் வாய்ப்பு பெற்ற இவர், பிரிமியர் தொடரில், குஜராத் அணிக்கு எதிராக 35 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார். இதுவரை 7 போட்டிகளில் 252 ரன் எடுத்துள்ளார். 5 முதல் தர, 6 லிஸ்ட் 'ஏ போட்டியில் 232 ரன் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்டில் சதம் விளாசினார். இவரது பேட்டிங் சாகசம், இங்கிலாந்து மண்ணிலும் தொடரலாம்.
இந்திய அணி (19 வயது): ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), அபிக்யான் (துணை கேப்டன், கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்கோத்ரா, மவுல்யாராஜ்சிங், ராகுல் குமார், ஹர்வன்ஷ் சிங், அம்பரிஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்.
'ரிசர்வ்' வீரர்கள்: நமன் புஷ்பக், தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகால்ப் திவாரி, அலங்கிரித் ரபோல்