எதிர்ப்பை மீறி மீண்டும் கிரஷர் குவாரி காடம்பட்டி மக்கள் கொதிப்பு

கொட்டாம்பட்டி: காடம்பட்டியில் பாறைகளை ஜல்லி கற்களாக உடைக்கும் கிரஷர் குவாரி செயல்படுவதற்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இங்கு குவாரி துவங்குவதற்கான பணி நடக்கிறது. இதன் அருகே குடியிருப்புகள், கோயில், விவசாய நிலம், நீர் நிலைகள் உள்ளன. கற்களை உடைப்பதால் உண்டாகும் சத்தம், துாசியால் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறால் மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. குடிநீராக பயன்படும் ஊற்று நீர் மாசுபட்டு உடல்நலம் பாதிக்கும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடல் கதிரேசன்: குவாரி அமைய உள்ள இடம் அருகே குடியிருப்புகளும், தம்பட்ட பாறை, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வரும் இணைப்பு சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் உள்ளது. பெரிய புரோவர்த்தி குளத்திலிருந்து புது கண்மாய்க்கு பாசன நீர் செல்லும் நீர்வளத்துறை கால்வாயை அழித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். குவாரி அருகே 8 கண்மாய்களும், 20 மீட்டர் துாரத்தில் இரண்டு போகம் விவசாயம் செய்யும் 500 ஏக்கர் நிலமும் உள்ளன. புரோவர்த்தி அய்யனார், சேவுகபெருமாள் கோயில் உள்ளது. விதிமீறல் மற்றும் பாதிப்புகள் குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் நீண்ட நாட்களாக மனு கொடுத்து வருகிறோம். 2020ல் கிரஷர் குவாரி செயல்பட முயற்சித்த போது மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது என்றார்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''ஆய்வறிக்கையை வைத்து கட்டடம் கட்ட அனுமதி கொடுத்துள்ளோம். கட்டி முடிக்கப்பட்டதும் காற்று மாசு தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து தொழில் துவங்க உரிமம் வழங்கப்படும் என்றனர்.

நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், மழைநீர் செல்வது போல் கிரஷர் குவாரியின் இரண்டு பக்கங்களின் கால்வாய் அமைப்பு உள்ளது. வி.ஏ.ஓ., ஆவணத்தை சரி பார்த்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். கால்வாய் ஆக்கிரமிப்பு உறுதி செய்யும் பட்சத்தில் அகற்றப்படும் என்றார்.

Advertisement