அரசு பள்ளிகளில் துாய்மை பணி கோடை விடுமுறையில் தீவிரம்

பொள்ளாச்சி : புதிய கல்வியாண்டு துவங்க உள்ளதால், அரசு பள்ளிகளில் துாய்மைப் பணியை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2025--26ம் கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில், பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை, பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், துாய்மைப் பணி மேற்கொள்ள ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன.

பள்ளி வளாகங்களில் வளர்ந்துள்ள முட்புதர்கள், செடிகளை வெட்டி அழிக்கவும், கழிப்பறைகளில் தண்ணீர் வசதிகளை முறைபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஆனைமலை ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே, அந்தந்த உள்ளாட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக, பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதேநேரம், நடப்பாண்டு, பருவமழை துவங்க உள்ளதால், பள்ளி வகுப்பறைகளில் அமைந்துள்ள மின் சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள், மின் பணியாளர்களைக் கொண்டு சரிபார்க்கப்படுகிறது. மேலும், கட்டடங்களில் உறுதி தன்மையும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வழக்கமான அலுவல் பணிகள் தொடருவதால், துாய்மைப் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.

Advertisement