திருத்தங்கலில் டெண்டர் விட்டும் துார்வாராத திறந்த நிலை கிணறு

சிவகாசி: திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிணறு இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில் குப்பை கிடங்காக மாறிவிட்டது.

இப்பகுதியின் கழிவுநீரும் கிணற்றில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் திறந்த நிலையில் உள்ள இந்த கிணற்றில் தவறி விழுந்து இருவர் இறந்துள்ளனர். தற்போதும் கிணறு திறந்த நிலையிலேயே இருப்பதால் குழந்தைகள் ,பெரியவர்கள் கிணற்றில் விழ வாய்ப்பு உள்ளது.

எனவே கிணற்றை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.இதற்காக ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரையும் பணிகள் துவங்கவில்லை. எனவே திறந்த நிலையில் உள்ள இந்த கிணறு மேலும் உயிர் பலி வாங்குவதற்கு முன்பாக துார்வாரி பாதுகாப்பான மூடி அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement