தேஜஸ்வி சூர்யா கண்டனத்துக்கு சோனு நிகம் பெயரில் எதிர்ப்பு

பெங்களூரு: வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச முடியாது என்று எஸ்.பி.ஐ., வங்கி மேலாளரின் பேச்சுக்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கண்டனம் தெரிவித்ததற்கு, சோனு நிகம் பெயரில், 'எக்ஸ்' தளம் கணக்கு துவக்கிய நபர், 'கன்னட திரைப்படங்களைபான் இந்தியா திரைப்படமாக வெளியிடாதீர்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

பெங்களூரு ஆனேக்கல் சூர்யா நகரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி பெண் மேலாளர், 'கன்னடத்தில் பேச முடியாது' என்று கூறி, வாடிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, அவரை வங்கி நிர்வாகம் இடமாற்றம் செய்தது. வங்கியின் செயலுக்கு முதல்வர் சித்தராமையாவும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

வங்கி மேலாளர் செயலுக்கு, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கண்டனம் தெரித்து, வெளியிட்ட 'எக்ஸ்' தள பதிவு:

கர்நாடகாவில், குறிப்பாக வங்கிகளில், பணியாற்றும் ஊழியர்கள், உள்ளூர் மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இது குறித்து லோக்சபாவின் உள்ளேயும், வெளியேயும் பலமுறை தெரிவித்து உள்ளேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கும் வலியுறுத்தி உள்ளேன். வாடிக்கையாளர்களிடம் ஆணவமாக பேசுவதுஏற்புடையதல்ல.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பின்னணி பாடகர் சோனு நிகம் பெயரில் உள்ள எக்ஸ் பதிவில், 'இனி கன்னட திரைப்படங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிடாதீர்கள். பான் இந்தியா அளவில் கன்னட திரைப்படங்களை வெளியிடாதீர்கள். இதை உங்களின் ஹீரோக்களுக்கு தெரிவிக்க உங்களுக்கு தைரியும் உள்ளதா' என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், பாடகர் சோன நிகம், ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே, எக்ஸ் சமூக வலைதளம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார். இந்த பதிவு 'சோனு நிகம் சிங்' என்ற பெயரில் பதிவிடப்பட்டு உள்ளது.

Advertisement