தங்க பதக்கங்களை அள்ளிய மாணவி

உயரம் தாண்டுதலில், பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ள வீராங்கனை பல்லவிக்கு, மேலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், பொருளாதார நெருக்கடி முட்டுக்கட்டையாக உள்ளது.

கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை காணலாம். கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், கோகோ, கால் பந்து, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கராத்தே என, பல்வேறு விளையாட்டு திறன்களை தங்களுக்குள் மறைத்து வைத்துள்ளனர். இவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்ப்பர் என்பதில், சந்தேகமே இல்லை.

ஆனால் இவர்களின் திறமை, குடத்திலிட்ட விளக்காய் ஒளி மங்கியுள்ளது. அதை வெளியே கொண்டு வந்து, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றினால் ஒளிவிட்டு பிரகாசிப்பர்.

வறுமை காரணமாக, தேவையான பயிற்சி கிடைத்தால் மட்டுமே அவர்களால் விளையாட்டில் ஜொலிக்க முடியும். இத்தகைய வீரர்களில் பல்லவியும் ஒருவர்.

மங்களூரு பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., படித்து வருபவர் பல்லவி, 20. இவர் உயரம் தாண்டுதலில் கை தேர்ந்தவர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றவர்.

கடந்த 2023ல் உத்தர பிரதேசத்தின், லக்னோவில் நடந்த 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளின், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்றார்.

தேசிய அளவிலான போட்டிகளில், நான்கு வெள்ளிப் பதக்கங்கள், மாநில அளவிலான போட்டிகளிலும் 15 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார். தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்க தயாராகிறார்.

ஜெர்மனியில் ஜூலை 16ம் தேதியன்று, சர்வதேச பல்கலைக் கழகங்களின் உயரம் தாண்டுதல் போட்டி நடக்கவுள்ளது. இதற்கு மங்களூரு பல்கலைக் கழகத்தின் பல்லவியும், மங்களூரின் ஆள்வாஸ் பல்கலைக்கழகத்தின் 11 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆள்வாஸ் பல்கலைக் கழகம் தன் மாணவர்களை அனுப்ப தயாராகிறது. அவர்கள் ஜெர்மனி சென்று வர, விமான டிக்கெட்,விசா உட்பட மற்ற செலவு களை பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. மாணவர்களும் உற்சாகத்துடன் போட்டிக்கு பயிற்சி பெறுகின்றனர்.

ஆனால் பல்லவிக்கு, தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என, பல்கலைக்கழகம் கை விரித்துள்ளது. அனைத்து செலவுகளையும் மாணவியே செய்து கொண்டு, ஜெர்மனிக்கு செல்லும்படி கூறிவிட்டது. இதனால் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற மாணவியின் ஆசை, நிராசையாகியுள்ளது.

மாணவி பல்லவிகூறியதாவது:

பயண செலவு, விசா, பதிவு கட்டணம் உட்பட, 2.50 லட்சம் ரூபாய் செலவாகும். பல்கலைக்கழக நிர்வாகம் நீயே செலவு செய்து கொள் என, கூறிவிட்டது. மே 19க்குள் பணம் கட்ட வேண்டியிருந்தது. ஆனால் என் தந்தையிடம் அவ்வளவு பணம் இல்லை. அரசு உதவிக்கரம் நீட்டினால், சர்வதேச போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியும். நாட்டுக்காக தங்க பதக்கம் பெற்று வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


மாணவிக்கு உதவ விரும்புவோர் 99450 69125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -

Advertisement