குளங்களில் நீர்மட்டம் சரிவு விவசாயிகள் கவலை

உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், நிலத்தடி நீர் ஆதாரமாக, கிராமப்புற குளங்களே உள்ளன. பருவமழை சீசன்களில் மட்டும் இக்குளங்களுக்கு நீர் வரத்து இருக்கும். குளங்களில் தேக்கி வைக்கப்படும் மழை நீரால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும்.

அவ்வகையில், உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் கடந்த வடகிழக்கு பருவமழை சீசனில், பெரும்பாலான குளங்கள் நிரம்பியது.

மேலும், பாசன காலத்தில் மழை பெய்யும் போது, தண்ணீரை வீணாக்காமல், குளங்களில், தேக்கினர். இவ்வாறு, நிரம்பியிருந்த குளங்களில் தற்போது நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்காவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் குறையும்; கிணறு மற்றும் போர்வெல்களிலும், வரத்து பாதிக்கும். மழை பெய்யாவிட்டால், திருமூர்த்தி அணையிலிருந்து, அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement