நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று

புதுடில்லி; நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. தலைநகர் டில்லியில் குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.



தென் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.


மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.


மும்பையில் மட்டும் இந்த மாதம் 95 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கேரளாவில் இந்த மாதம் 182 பேருக்கு தொற்று உள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


சென்னையில் 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 சதவீதம் பேருக்கு இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவற்றில் பெரும்பாலான மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.


இந் நிலையில் தலைநகர் டில்லியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குருகிராம், பரிதாபாத் பகுதிகளில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குருகிராம் பகுதியில் கொரோனா தொற்றுக்கு ஆளானவரின் வயது 31. இவர் அண்மையில் மும்பைக்கு சென்று வந்திருக்கிறார்.


பரிதாபாத்தில் 62 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இவர் அண்மைக்காலமாக எங்கும் செல்லாதவர்.


இதுகுறித்து குருகிராம் சுகாதாரத்துறை மருத்துவர் ரஜ்லிவால் கூறியதாவது;


2 பேரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை அவர்களின் நடவடிக்கைகளை உற்றுநோக்கி வருகிறது. குடும்பத்தினரிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.


அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என்று கண்டறிந்து விட்டோம். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement