நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை

16

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.



பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலம், அதற்குப் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த காரணத்தால், அதை மீண்டும் தங்களுக்கே வழங்க கோரி லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததை தொடர்ந்து அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் செயலாளர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா.



நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான, இவருக்கு இன்று (மே 23) தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறியதாவது:
* நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.



* இருப்பினும், அப்பீல் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


* ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா தனது சம்பளத்திலிருந்து இரண்டு வயதான மனுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.


* 30 நாட்களுக்குள் அன்சுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றால், அவரை தண்டனை அனுபவிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். அன்சுல் மிஸ்ரா தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement