வணிக வளாகத்தின் உள் 3வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

அமைந்தகரை :சைதாப்பேட்டை, சேஷா சலா கிராமணி தெருவைச் சேர்ந்தவர் இந்திரஜித் சிங், 33; தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர். இவரது மனைவி பல்ஜித், 29. இந்திரஜித் சிங் நேற்று மதியம், அமைந்தகரையில் உள்ள 'ஸ்கை ஒன்' என்ற வணிக வளாகத்திற்கு, இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

சில கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு, மூன்றாவது தளத்தில் உள்ள படிக்கட்டு அருகே நின்றுக் கொண்டிருந்தார். பின், தான் வாங்கிய பொருட்களை கவருடன் தரையில் வைத்துவிட்டு, திடீரென தலை கீழாக குதித்தார்.

வளாகத்திற்குள்ளே தரைத்தளத்தில் விழுந்தவர், தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், குழந்தை இல்லாதது மற்றும் பணி ரீதியான மன அழுத்தத்தால் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement