நாம் வெற்றியை தக்க வைக்க வேண்டும் தி.மு.க.,வினருக்கு அமைச்சர் ஆலோசனை தி.மு.க.,வினருக்கு அமைச்சர் ஆலோசனை

விழுப்புரம்:அ.தி.மு.க., செல்வாக்கை இழந்து விட்டதால், தேர்தல் வெற்றியை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்' என தி.மு.க., தேர்தல் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், அவர் தொகுதி வாரியாக கடந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு கிடைத்த ஓட்டு விபரங்களை குறிப்பிட்டு, அந்த பகுதி நிர்வாகிகளை தனித்தனியாக குறிப்பிட்டு தனது பாணியில் கிண்டல் செய்து, கள நிலவரத்தை விசாரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வானுார் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை. அங்கு நாம் சரியாக பணியாற்றவில்லை என அர்த்தம்.

இனி நாம் 7 தொகுதிகளிலும், கடந்த தேர்தலை விட கூடுதல் ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும்.

தி.மு.க.,வில் பதவி நிரந்தரமல்ல. தொண்டர்கள் நிரந்தரம். உங்களின் செல்வாக்கு, மரியாதையை ஓட்டுகளாக மாற்ற வேண்டும். மரியாதையை தியாகம் செய்து, களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் எவ்வித திட்டங்களும் இல்லை. தி.மு.க., ஆட்சியில் தனி நபர்களும் பயனடையும் திட்டங்கள் நடந்து வருகிறது.

அ.தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்துள்ளனர்.இப்போது, சோஷியல் மீடியாவை நம்பியே அவர்கள் உள்ளனர்.

அ.தி.மு.க.,விற்கு செல்வாக்கு இல்லாமல் போனதால் நமது தொடர் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கட்சியில் பல அணிகள், பல பொறுப்பாளர்கள் உள்ளதால், நீங்கள் ஓட்டளிப்பதோடு, ஓட்டுகளை சிதறாமல் வாங்கி கொடுத்தாலே வெற்றி நிச்சயம். வேலை செய்பவர்களுக்கு பதவி கிடைக்கும்.

நமக்குள் பல பிரிவுகள், பிணக்குகள் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் ஒற்றுமையாக களப்பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisement