மாரடைப்பால் இறந்த பஸ் டிரைவர் பயணியரை காப்பாற்றிய கண்டக்டர்

ஒட்டன்சத்திரம்:ஓடிகொண்டிருந்த பஸ்சில் மாரடைப்பால் ஸ்டியரிங் மீது டிரைவர் சரிய, தன் கையால் பிரேக்கை அழுத்தி, பஸ்சை நிறுத்தி, பயணியரை காப்பாற்றிய கண்டக்டரின் சாமர்த்தியத்தை பயணியர் பாராட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு, தனியார் பஸ் சென்றது.

கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபு, 30, பஸ்சை ஓட்டினார்.- கண்டக்டராக விமல்குமார், 27, இருந்தார்.

ஒட்டன்சத்திரம் ரோட்டில், சிந்தலவாடம்பட்டி பஸ் ஸ்டாப்பில் நிற்பதற்காக பஸ் மெதுவாக சென்றது.

அப்போது, டிரைவர் பிரபு நெஞ்சு வலிப்பதாக கண்டக்டரிடம் கூறி உள்ளார். சிறிது நேரத்தில், பஸ் ஓடிக் கொண்டிருந்த போதே, பிரபு ஸ்டியரிங்கில் மயங்கி சரிந்தார். டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, பஸ் தாறுமாறாக செல்வதை கண்ட பயணியர் அலறினர்.

உடனே சுதாரித்த கண்டக்டர் விமல்குமார், டிரைவரை துாக்கி, தன் கையால் பிரேக்கை அழுத்தி, பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

டிரைவருக்கு வலிப்பு வந்ததாக நினைத்து, அவரது கையில் இரும்பு ராடு கொடுக்கப்பட்டது.

ஆனாலும், எந்த பயனும் இல்லாமல், அவர் மாரடைப்பில் இறந்தது பின்னர் தெரியவந்தது.

துரிதமாக செயல்பட்ட கண்டக்டரை, பஸ்சில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணியர் வெகுவாக பாராட்டினர்.

Advertisement