ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு

69


தேவகோட்டை: ''ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியமாகும்,'' என, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் நடந்த சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.


அவர் மேலும் பேசியதாவது: ஆங்கிலேயர்கள் அமெரிக்கா, கனடா நாடுகளில் அடித்தட்டு மக்களிடையே பிரித்தாளும் முறையை செயல்படுத்தினர். இந்தியாவில் அந்த வழியை பின்பற்ற முடியவில்லை. இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்தனர். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி தேசிய ராணுவம் அமைத்த போது தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் இணைந்தனர்.


இச்சூழலில் ஆங்கிலேயர்கள் எப்படி பிரித்தாள்வது என யோசித்தனர். எது ஒன்றுபடுத்துவது என யோசித்ததில் கோயில்கள் என கண்டுபிடித்தனர். மக்களின் அனைத்து வாழ்வியலிலும் கோயில்கள் தான் மையமாக இருந்ததை தெரிந்து கொண்டனர். கோயில்களை பலவீனப்படுத்தினால் சமூகத்தை, சமுதாயத்தை பலவீனப்படுத்த முடியும் என முடிவு செய்தனர்.


கோயில்களை நிலங்கள் சொத்துக்கள் மூலம் வருவாய் ஏற்படுத்தி நிர்வகித்தனர். அதனால் கட்ட முடியாத வகையில் வரிகளை அதிகப்படுத்தி முடக்கினர். ஜாதிகளுக்குள்ளும் பிரிவினை ஏற்படுத்தினர். அதுவும் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தியது.


ஆங்கிலேயர் பிரித்தாளும் செயலை செய்தனர் என்பது ஆச்சரியமில்லை. விடுதலைக்கு பிறகும் ஆட்சியாளர்கள் அதன் வழியே செயல்பட்டது தான் ஆச்சரியமாக உள்ளது.
இந்த நாட்டிலே ஹிந்து தர்மத்தை பக்தியை டெங்குவோடும், மலேரியாவோடும் வியாதிகளோடும் ஒப்பிடுவதை துர்பாக்கியத்தோடு பார்க்கிறோம்.


பக்தி என்பது அறிவியலாகும். சிலர் பக்தி அறிவியலுக்கு ஒவ்வாதது, பக்தர்கள் அறிவியல் சிந்தனையற்றவர்கள் என்றெல்லாம் கூறுகின்றனர். இந்தியா முழுவதும் சிவன், சக்தி, பெருமாளை வணங்கிய பக்தர்கள் அறிவியலை வளர்க்கவில்லையா.



இந்த புண்ணிய பூமியில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அறிவியல் பக்தி மனத்தை பரப்பியது பகுத்தறிவு சிந்தனை இல்லாதவர்களா. இப்படி விவாதங்கள் ஏன் நடத்தப்படுகிறது. ஏனென்றால் கோயில்கள் ஒழிய வேண்டும் பக்தர்கள் கோயில்களுக்கு செல்வதை மறக்க வேண்டும்.


தங்கள் பாரம்பரியங்களை கோயில்களுக்கு சென்று வழிபடும் எண்ணத்தையே மறந்து விட வேண்டும். இதன் மூலம் கோயில்கள் ஒழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சூழ்நிலையை தான் இப்படிப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

Advertisement