ரயில் டிக்கெட் 'புக்' செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது

4



கோவை : முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து, அதிக விலைக்கு பயணிகளிடம் விற்பனை செய்த நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையினர், சட்டவிரோத ரயில் டிக்கெட்டுகள் விற்பனை குறித்து கண்டறிய 'உப்லாப்த்' திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். திட்டத்தின்படி, ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார், திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முன்பதிவு மையத்தில், நின்றிருந்த நபரிடம் முன்பதிவு டிக்கெட்கள், முன்பதிவுக்கான விண்ணப்பங்கள் இருப்பதை கண்டனர். அந்நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், உத்தர்பாராவை சேர்ந்த இம்ரான் ஹூசைன் சேக், 37 எனத் தெரிந்தது.


தற்போது, கோவை எம்.ஜி.என்., வீதியில் தங்கியிருப்பது தெரிந்தது. அவர் ரயில் டிக்கெட்டுகளை போத்தனுார், கோவை, வடகோவை, பீளமேடு, ஒத்தபாலம் ஆகிய முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து, அவற்றை ரூ.300 கூடுதல் விலைக்கு விற்றது தெரிந்தது.



அவரது மொபைல்போனை பறித்த போலீசார், அதில் சமீபத்தில் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான, 10 ரயில் முன்பதிவு டிக்கெட்கள் இருந்ததை கண்டனர்.


அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, மொபைல்போன், ரூ.26 ஆயிரம் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement