தேனீக்களால் தாடி வளர்த்து பேராசிரியர் விழிப்புணர்வு

கோவை, : உலக தேனீ தினத்தை முன்னிட்டு, வேளாண் பல்கலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தேனீ வளர்ப்பாளர் ஆன்டன் ஜான்சா நினைவாக, உலக தேனீ தினம் மே 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 'தேனீக்கள் - இயற்கை அளித்த ஊட்டச்சத்து உற்பத்தியாளர்கள்' எனும் பெயரில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், அனைத்து வகையான தேனீக்கள் குறித்தும், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தேனின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான தேனீ மெழுகு மூலம் சிலை, சோப்பு தயாரிப்பு, தேன் நெல்லி, ரோஜா குல்கந்த் தயாரிப்பு செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்தல், மதுரம், மற்றும் மகரந்தம் சேகரிப்பு ஆகிய பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தேனீக்களின் மீதான அச்சம் விலக பேராசிரியர் சாமிநாதன், தன் முகம் முழுவதும் தேனீக்களை, பரவச் செய்து, தேனீ தாடி வைத்துக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு, பல்கலையின் பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement