வேலை உறுதி திட்டத்தில் கூடுதல் பணி வழங்குங்க! கிராம மக்கள் எதிர்பார்ப்பு

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியில், கோடைகாலத்தில் வேளாண் பணிகள் குறைந்துள்ளதால், வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை தேர்வு செய்து வழங்க, மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிராம ஊராட்சிகளில், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு அளிக்கவும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு நாளைக்கு, 319 ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. உடுமலையில் 38, குடிமங்கலத்தில் 23, மடத்துக்குளத்தில் 11 ஊராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தொகுப்புகள் அடிப்படையில் பணிகள் வழங்கப்படுகிறது. இதன்படி உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில், 130 தொகுப்புகள் உள்ளன.

கடந்த நிதியாண்டில், ஒரு தொகுப்புக்கு ஒரு நாளுக்கு, 100 பணியாளர்கள் நியமிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் நடப்பு நிதியாண்டில், ஒரு தொகுப்புக்கு அதிகபட்சம், 20 பேர் மட்டுமே நியமிக்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப வேலை உறுதி திட்டத்தில் பணிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணிகளுக்கும், நீர்நிலை துார்வாருதல் மற்றும் புதிதாக குளம் கட்டுதல் பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மையான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளது.

ஒரு ஆறுதலாக வேளாண் பணிகளுக்கு சென்றனர். கடந்த மூன்று மாதங்களாக கோடை காலமாக இருப்பதால், வேளாண் பணிகளும் பெரிதாக இல்லை.

கிராமப்பகுதிகளில் வேளாண் மற்றும் வேலை உறுதி திட்டப்பணிகளை மட்டுமே நம்பி இருந்தவர்கள், தற்போது வேலைவாய்ப்பில்லாமல் பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு



அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கூறியதாவது:

மத்திய அரசு ஒன்றிய நிர்வாகங்களுக்கான நிதியை குறைத்துவிட்டது. வேலை உறுதி திட்டத்தில் இருந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பணிகளை செய்ய தயாராகவும், பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, பணிகள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஒன்றிய நிர்வாகங்களுக்கான நிதியை அதிகரித்து வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுப்பதற்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

Advertisement