மண் கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்கீடு பி.ஏ.பி., பாசன சபையினர் எதிர்பார்ப்பு
உடுமலை : பாசன சபைகளுக்கு நிதி ஒதுக்காததால், ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பகிர்மான கால்வாய்களை துார்வார முடியாமல், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் வாயிலாக, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து விளைநிலங்களுக்கு உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில், பிரதான, கிளை கால்வாய்களில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும், பகிர்மான கால்வாய்கள் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எனப்படும் பாசன சபைகள் பராமரிப்பில் உள்ளன.
பாலாறு படுகையின் கீழ், 137 பாசன சபைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இச்சபைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகிர்மான கால்வாய்கள் அனைத்தும், மண் கால்வாய்களாகவே உள்ளன. எனவே, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், இந்த மண் கால்வாய்களை துார்வார வேண்டும். ஆனால், துார்வார, பாசன சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு அரசால் வழங்கப்படுவதில்லை.
பகிர்மான கால்வாய்களில் உள்ள ஷட்டர்களும், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளன. இதனால், நீர்நிர்வாகத்தில் பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது. ஷட்டர்களை மாற்றியமைக்கவும், பாசனசபையினரிடம் நிதி இல்லை.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு, துார்வாரும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இதனால், பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், தென்னை உள்ளிட்ட சாகுபடிகளுக்கு முழுமையாக பாசன நீர் கிடைப்பதில்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட துணை தலைவர் பரமசிவம் கூறுகையில், '' பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு முன் மண் கால்வாய்களை துார்வார விவசாயிகளும், பாசன சபையினரும் போராட வேண்டியுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிதி ஒதுக்கீடு பெற்றாலும், அனைத்து கிராமங்களிலும் தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. எனவே, குடிமராமத்து போன்ற சிறப்பு திட்டங்களின் கீழ், பாசன சபையினருக்கு நிதி ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால், இரு மாவட்ட ஆயக்கட்டு பகுதியிலும், வேளாண் சாகுபடி பாதிக்கும்,'' என்றார்.
அரசும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.71,920!
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு