சிவகாசியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் கிரானைட், கல் குவாரி மூடாத பள்ளங்கள்

சிவகாசி : சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உரிமம் முடிந்த கிரானைட், கல் குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் மூடப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி உயிர் பலிகள் ஏற்படுகிறது.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் கிரானைட் குவாரி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த குவாரியின் உரிமம் ஓராண்டுக்கு முன்பு முடிந்து விட்டது. ஆனால் இங்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் மூடப்படவில்லை. பொதுவாக கிரானைட், கல் குவாரிகளில் கற்களை எடுப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்படுவது வழக்கம். உரிமம் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்பது விதி.

ஆனால் இங்கு பெரும்பான்மையான குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகின்றது. இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீருக்காக செல்லும்போது தவறி விழுந்து இறந்து விடுகின்றது. தவிர இயற்கை உபாதைக்கு செல்பவர்களும் விபரீத அறியாமல் தண்ணீர் உள்ளது என குளிக்க செல்பவர்களும் தவறி விழுந்து இறந்துள்ளனர். சிறுவர்களும் விளையாட்டுத்தனமாக இந்த குவாரியில் தேங்கியுள்ள நீர் நிலைகளில் குளிக்கச் சென்று விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே இது போன்ற குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement