கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!

2


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால், குடிநீர் தேவைக்கு பேருதவியாக இருக்கும் சிறுவாணி, பில்லுார் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மற்றும் தெற்கு எல்லைகள், கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.


கடந்த 23ம் தேதி அணையின் நீர்மட்டம், 80.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 245 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 24ம் தேதி 79.75 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 101 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று (மே 25) காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம், 86 அடியாக உயர்ந்து உள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தென்மேற்கு பருவமழையும் பெய்யத் தொடங்கியதை அடுத்து, அணைக்கு வினாடிக்கு, 3013 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து, அணையில் ஒரே நாளில், 7 அடி தண்ணீர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு, 6,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த அணை, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

சிறுவாணி



சிறுவாணி அணை நீர் மட்டம், இன்று 21.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 49.53 அடி. கேரள அரசு உத்தரவுபடி, 44.61 அடி உயரத்துக்கு மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். நேற்று பெய்த கனமழையால், 19 அடியாக இருந்த நீர் மட்டம், 2.55 அடி உயர்ந்து, 21.55 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த அணை, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர பகுதி கிராமங்களின் குடிநீர் தேவைக்கு பேருதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement