தாஜ்மஹால் பாதுகாப்புக்கு ட்ரோன் எதிர்ப்பு கவசம்!

5


புதுடில்லி: உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலில் ட்ரோன் மூலம் வரும் ஆபத்துக்களை தடுத்து அழிப்பதற்கான பாதுகாப்பு கவசம் நிறுவப்பட உள்ளது.


ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

அதை எதிர்த்து, ட்ரோன் உதவியுடன் இந்திய நிலைகள் மீதும் பொதுமக்கள் மீதும் வழிபாட்டு இடங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சீக்கியர்களின் தலைமை கோவிலாக கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோவில் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இதே போன்ற தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் வரும் காலத்தில், நடத்தலாம் என உளவுத்துறையினர் கணித்துள்ளனர்.


தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள நினைவுச் சின்னங்களில் ஒன்றாக தாஜ்மகால் பட்டியலிடப்பட்டுள்ளது.தாஜ்மஹாலுக்கு உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உத்தரபிரதேச மாநில போலீசார் இதனை பாதுகாத்து வருகின்றனர்.


உளவுத்துறை கணிப்பை முன்னிட்டு தாஜ்மஹாலுக்கு ட்ரோன் தடுப்பு கவச பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆயுதங்களுடன் ஏவப்படும் ட்ரோன்களை முறியடிக்கும் வகையில் இந்த நவீன பாதுகாப்பு கவசம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement