பொறுப்பற்ற நடத்தை: கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாப்பை நீக்கினார் லாலு

13

பாட்னா: பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகனான தேஜ் பிரதாபை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு அறிவித்துள்ளார்.

லாலுவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், நேற்று வெளியிட்ட சமூகவலைதள பதிவில், தனது தோழி அனுஷ்கா யாதவுடனான தனது நீண்டகால உறவை அறிவித்து, அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் சமூகவலைதள பதிவில் பகிர்ந்து குறிப்பிட்டு இருந்தார். தேஜ் பிரதாப் அறிவித்த மறுநாள் இன்று அவரது தந்தையான லாலு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

லாலு வெளியிட்டுள்ள அறிக்கை:

தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான கட்சியின் கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்ப மதிப்புகள் அல்லது மரபுகளுக்கு ஏற்ப இல்லை.

அவரது பொறுப்பற்ற நடத்தை, குடும்ப மதிப்பு மற்றும் பொது ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால், கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து நீக்குகிறேன். கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார். இனிமேல், அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது.

அவர் நல்லது கெட்டது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் வேண்டும். நான் எப்போதும் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பவன். கீழ்ப்படிதலுள்ள குடும்ப உறுப்பினர்கள் பொது வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றனர்.
இவ்வாறு லாலு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement