6வது முறையாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நிபுணர்கள் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் மாளிகைக்கு 6வது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முதல்வர் அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அண்மையில் இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சோதனையில் அவை அனைத்தும் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந் நிலையில், கவர்னர் மாளிகைக்கு இன்று இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் உடனடியாக சோதனை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் கவர்னர் மாளிகை வளாகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. விசாரணை முடிவில் அது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது. இருப்பது, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகைக்கு ஏற்கனவே ஏப்.14 மற்றும் 22 தேதிகளிலும், மே 9, 13 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே 5 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று 6வது முறையாக அதே போன்று மிரட்டல் விடுக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.