பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவுக்கு புதிய அந்தஸ்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெருமிதம்

14

விஜயவாடா: இந்தியா 4வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம், ஐ.எம்.எப்., தரவுகளை மேற்கோள் காட்டி, உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றன. நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம் என்று கூறியிருந்தார்.

சுப்பிரமணியம் கூறியதை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று கூறியதாவது:

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுவது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தையும் வலுவான பொருளாதார நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) அடைந்து, ஜப்பானை விஞ்சியது, மேலும் 2047ம் ஆண்டுக்கான விக்ஸித் பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை அடையும் பாதையில் உள்ளது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Advertisement