திருக்குறளை பரப்புதல் சிறப்பானது முன்னாள் துணைவேந்தர் பெருமிதம்

கரூர்:கரூர் மாவட்டம், புத்தாம்பூரில் உள்ள வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின், 5ம் ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார்.
தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் பேசியதாவது:நான் பிறந்த மண் அருகே நிகழ்ச்சி நடக்கிறது என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பிளஸ் 1 வரை படித்ததேன். இதனால், என் உணர்வோடு கலந்த இடமாக உள்ளது. எங்கள் ஊரில் திருக்குறளை பரப்ப முயற்சி மேற்கொள்வது சிறப்பானது மட்டுமல்லாது, அதற்கு வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், முற்றோதல் செய்பவர்களை பேச வைக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த விழா நடத்தப்படுவது பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேசினார்.
பின், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்குறள் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.