முடக்கத்தான் பூக்களிலிருந்து தேன் எடுக்கிறேன்!

மூலிகைச் செடியான முடக்கத்தான் பூக்களில் இருந்து தேன் சேகரித்து விற்பனை செய்து வரும், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்:
பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பு முடித்ததும் விவசாயம் சார்ந்த ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதே சமயம், இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ள பொருள் எதுவோ, அது சார்ந்த தொழிலில் இறங்கணும் என்று தீர்மானித்தேன். அதற்கான தேடலில் இறங்கியபோது, தேன் வியாபாரம் எனக்கு பல வகைகளிலும் ஏற்ற தொழிலாக இருந்தது.
முதற்கட்ட முயற்சியாக, நண்பர் ஒருவரின் தோட்டத்தில், 10 பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்க ஆரம்பித்தேன்.
நாளடைவில் தேன் பெட்டிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தேன். முருங்கை தேன், மலர் தேன் சேகரித்து விற்பனை செய்து வந்தேன்.
வேறு ஒரு மூலிகையில் தேன் சேகரிக்கலாம் என்ற தேடலில் ஈடுபட்டபோது தான், நண்பர் ஒருவர், 'மற்ற செடிகளை விட, முடக்கத்தான் கொடியில் நிறைய பூக்கள் இருக்கிறது; வாய்ப்பிருந்தால் முடக்கத்தான் தேன் சேகரிப்பில் ஈடுபடலாம்' என்று கூறினார்.
சோதனை முயற்சியாக, 100 பெட்டிகள் அமைத்து தேன் சேகரிக்க ஆரம்பித்தேன். நான் எதிர்பார்த்ததை விட, அதிகமாக தேன் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், தேனீ பெட்டிகளின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரித்தேன்.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை தான், முடக்கத்தான் கொடிகளில் பூக்களை பார்க்க முடியும். தும்பைப்பூ போன்று, 'பளிச்' வெண்மை நிறத்தில் இருக்கும். தேனீக்கள் சேகரிக்கக் கூடிய தேன், வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். முடக்கத்தான் இலைகளில் வரும் அதே வாசனை, அதில் கிடைக்கும் தேனிலும் வீசும்.
கடந்த முறை, 800 பெட்டிகள் அமைத்தேன். 15 நாட்களுக்கு ஒருமுறை அந்தப் பெட்டிகளை திறந்து, தேன் சேகரித்தேன்.
ஒரு பெட்டியில் இருந்து, 3 கிலோ வரை தேன் கிடைத்தது. 800 பெட்டிகள் வாயிலாக, 2,000 கிலோ தேன் கிடைத்தது. 1 கிலோ, 700 ரூபாய் என, விற்பனை செய்ததன் மூலம், 14 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
தேனீப் பெட்டிகள் பராமரிப்பு, தேனை பிரித்தெடுத்தல் என எல்லா செலவுகளும் போக, 10 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
கடந்த முறை, முடக்கத்தான் தேன் உற்பத்தி மூலம் லாபம் கிடைத்ததால், இந்த முறை உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்து, 1,000 பெட்டிகள் அமைத்திருந்தேன். மொத்தம், 2,300 கிலோ தேன் கிடைத்துள்ளது.
தொடர்புக்கு: 95666 10023