விண்வெளி அறிவியல் பாடம் எடுக்கும் இளம் தொழில் முனைவோர்

பெங்களூரை சேர்ந்தவர் நிகிதா, 29. விண்வெளி அறிவியலில் ஈடுபாடு கொண்ட இவர், பெங்களூரு அல்லியான்ஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியாளர் பாடம் படித்து வந்தார்.


கல்லுாரியில் படிக்கும் போதே, 2016ல், 'விண்வெளி கிளப்'பை, கல்லுாரியிலேயே துவக்கினார். மாடல் ராக்கெட்ரி' குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நாளடைவில் இவரின் சங்கத்திற்கு மாணவர்கள் இடையே வரவேற்பு அதிகரித்தது.

அறிமுகம்



படிப்பை முடிப்பதற்கு முன்பு, தொழில்முனைவர் சுஜய் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. விண்வெளி அறிவியல் குறித்து அவரிடம், நிகிதா பகிர்ந்து கொண்டார். சுஜய் ஸ்ரீதருக்கு அவரின் எண்ணம் பிடித்தது. இருவரும் இணைந்து கல்லுாரிக்கு வெளியே விண்வெளி கிளப்' துவக்க தீர்மானித்தனர்.


இதன்படி, 2017ல் படிப்பை முடிந்த நிகிதா, சுஜய் ஸ்ரீதருடன் இணைந்து, எஸ்.எஸ்.இ.ஆர்.டி., எனும் விண்வெளி கல்வி ஆராய்ச்சி மேம்பாட்டு சங்கத்தைத் துவக்கினார். இதன் இணை நிறுவனராக நிகிதா உள்ளார். கர்நாடகாவில் இதை பதிவு செய்வதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, கேரளாவில் பதிவு செய்தனர்.

இச்சங்கம் வாயிலாக அமெரிக்காவின் நாசா ஏற்பாடு செய்வது போன்று விண்வெளி பயிற்சி முகாம்களை நடத்த துவக்கினர். மேலும் கல்லுாரியில் இறுதி ஆண்டு, புராஜெக்ட்'டுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, மாதிரி ராக்கெட்டுகள், ரிமோட் கன்ட்ரோல் விமானங்கள் போன்றவற்றை உருவாக்க உதவி வருகின்றனர்.

புரட்சிகள்



இதுகுறித்து நிகிதா கூறியதாவது:

உலக வரலாற்றில் அவ்வப்போது புரட்சிகள் நடந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப புரட்சி வந்தபோது, அனைவரும் கணினியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. இம்முறை விண்வெளி புரட்சி துவங்கி உள்ளது.

இதில் சேர லட்சக்கணக்கில் செலவாகும். அதனால் மாணவர்கள், இந்த வாய்ப்பை இழக்கின்றனர். இதை தடுக்கவே, நாங்கள் இதுபோன்று விண்வெளி பயிற்சி நடத்துகிறோம்.

செயற்கைக் கோள்கள் மிகவும் பெரியது என்றும்; அதை நம்மால் உருவாக்க முடியாது என்று மாணவர்கள் பலர் நினைக்கின்றனர். அதை அவர்களால் உருவாக்க முடியும் என்பதை நாங்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறோம்.

எங்கள் சங்கத்துடன் மூன்று தனியார் பள்ளிகள் இணைந்துள்ளன. இப்பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்து பாடம் நடத்தி வருகிறோம்.

அதுபோன்று, அக் ஷய பாத்ரா பவுண்டேஷனுடன் இணைந்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தை கற்பிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




- நமது நிருபர் -

Advertisement