ஆயுர்வேத மருத்துவரின் 'சூப்பர் புட்'

'கடமையை செய்தால் வெற்றி... கடமைக்கு செய்தால் தோல்வி' என்ற வாசகம் உண்மை தான். எனினும், சில நேரங்களில் தங்கள் கடமையை தாண்டியும் கூடுதல் வேலைகளை செய்பவர்களே அதிக கவனம் மற்றும் புகழை பெறுகின்றனர். அப்படி, ஒரு ஆயுர்வேத மருத்துவர், தன்னிடம் வரும் நோயாளிகளின் உடல் நலன் மேல் அக்கறை கொண்டு, கூடுதல் வேலையை செய்து வருகிறார். இதனால், அவர் அப்பகுதியில் பிரபலம் அடைந்து உள்ளார்.



தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் டாக்டர் மீரா. இவர், மங்களூரில் கத்ரி எனும் பகுதியில் சஞ்சீவினி ஆயுர்வதே கிளினிக்கில், ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர்.

இதற்கு காரணம், இவரது மருத்துவ முறையும், நோயாளிகளை கவனிக்கும் விதமே. இவர் நோயாளிகளுக்கு வழக்கமாக மருந்துகள் வழங்குவது மட்டுமின்றி, சத்தான உணவுகளையும் வழங்குகிறார். இதனாலே, இவருக்கு மவுசு அதிகமாக உள்ளது.

'மைக்ரோ கிரீன்ஸ்'



நோய்கள் வருவதற்கு மூல காரணமே சத்து குறைபாடே என்பதை அறிந்தவர், நோயாளிகளுக்கு சத்தான, 'மைக்ரோ கிரீன்ஸை' வழங்குகிறார். மைக்ரோ கிரீன்ஸ் என்பது காய்கறிகள் அல்லது மூலிகைகளின் விதை முளைத்தவுடன், முளை செடியாக வளரும்போது, அறுவடை செய்து சாப்பிடும் முறை.


இது முளை கட்டிய தானியங்களை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது. 7 முதல் 14 நாட்களுக்குள் வளர்ந்துவிடும். 2 முதல் 4 அங்குலம் உயரம் உடையவை. தற்போது, இதற்கு டிமாண்ட் அதிகம்.


இவ்வளவு சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸை தன் கிளினிக்கில் உள்ள சிறிய ஹாலிலே வைத்து வளர்த்து வருகிறார். வெந்தயம், பட்டாணி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி போன்ற தானியங்களை பயிரிட்டு உள்ளார். இதை, இவரே பராமரித்து வருகிறார்.

மலிவு விலை



நோயாளிகள் இல்லாத நேரத்தில், முழுதுமாக பராமரிப்பு வேலைகளில் இறங்குவார். இவரிடம் வரும் நோயாளிகளில் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மைக்ரோகிரீன்ஸையும் வழங்குகிறார். இதை, மார்க்கெட் விலையை விட குறைந்த விலையிலே தருகிறார். இதுமட்டுமின்றி, அதை எந்த நேரத்தில், எப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக பலன் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கிறார்.

இது குறித்து டாக்டர் மீரா கூறியதாவது:



என்னிடம் வரும் பல நோயாளிகள் புற்றுநோய் பற்றி கவலைப்பட்டனர். இதற்கு ஒரு தீர்வை கண்டறிய முயற்சித்தேன். அப்போது, புற்றுநோயை தடுக்கும் வல்லமை படைத்த மைக்ரோ கிரீன்ஸை பற்றி அறிந்தேன். இதை சாப்பிடுவதன் மூலம், புற்றுநோயாளிகள் நோய் பரவலை தடுக்க முடியும்; கல்லீரலில் வரும் பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படும்.


இது பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது. செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் உணவாக இருந்தது. எனவே, அனைவரும் பயன்படுத்தும் வகையில், நானே வளர்க்க துவங்கி விட்டேன். இதை சாலட், குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் 'சூப்பர் புட்' என அழைக்கப்படுகிறது.




- நமது நிருபர் -

Advertisement