செப்பனிடாத ஜல்லி பாறைகள் சாலை சீரமைக்க நாவலுார் மக்கள் வேண்டுகோள்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் கிராமம், கலைஞர் நகரில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கான்கிரீட் சாலை சேதடைந்து பல்லாங்குழியாக மாறியது.
சமீபத்தில் பெய்த்த மழையில், கலைஞர் நகர் சாலை முற்றிலும் சேதமடைந்நு உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதசாரிகள் நடக்கவே லாயக்கற்ற நிலையில் சாலை மோசமானது.
இதையடுத்து, சாலையை செப்பனிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த வாரம் ஜல்லி பாறைகள் சாலையில் கொட்டப்பட்டன.
இருந்தும், சமன் இல்லாத சாலையில் உள்ள பாறைகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் வாகனங்களை இயக்க மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
குழந்தைகள், வயதானோர், ஜல்லி கொட்டப்பட்ட சாலையில் நடக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, கலைஞர் நகர் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.