வாலாஜாபாத் ரயில்வே மேம்பால பணி துவங்காததால் புறவழிச் சாலை அமைக்கும் பணியில் தொய்வு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் பேரூராட்சி உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாலாஜாபாத் முக்கிய நகர் பகுதியாக இருந்து வருகிறது.

செங்கல்பட்டு வழியாக, காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள் மற்றும் வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஒரகடம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் வாலாஜாபாத் ராஜவீதி வழியாக இயங்குகின்றன.

மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் வாலாஜாபாத் பஜார் வீதி வழியாக சென்று வருகின்றன.

ஒரகடம், தேவரியம்பாக்கம், கட்டவாக்கம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதி தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் கம்பெனி பேருந்துகளும் ஏராளமானவை வாலாஜாபாத் சாலை வழியாக செல்கின்றன.

இதனால், வாலாஜாபாத் சாலையில் வாகனங்கள் அதிகரித்து, காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் தினசரி அவதிபட்டு வருகின்றனர்.

இதை தவிர்க்க, வாலாஜாபாத் சாலையில், புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்த வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, சென்னை- - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - சதுரங்கப்பட்டினம் சாலை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய 448 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், வாலாஜாபாத் புறவழிச் சாலை அமைக்க 141.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சி - செங்கை சாலையில், வெண்குடி அருகே துவங்கி கிதிரிப்பேட்டை வழியாக புளியம்பாக்கம் சாலையை சென்றடையும் வகையில், 6.5 கி.மீ., துாரத்திற்கான புறவழிச் சாலை அமைக்கும் பணி, 2022ல் துவங்கியது.

புறவழிச் சாலை பணியை, 2024ம் ஆண்டு, மார்ச்- 31 நிறைவு செய்ய வேண்டும் என, திட்டமிடப்பட்டது.

ஆனால், அதற்கான ஒப்பந்த காலம் முடிவுற்று ஓராண்டாகியும் இதுவரை பைபாஸ் சாலை பணி நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது.

குறிப்பாக வாலாஜாபாத் பைபாஸ் சாலை அமையும் பகுதியில் ரயில் கடவுப் பாதை குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டிய பணி இதுவரை நுனி அளவும் துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இதனால், வாலாஜாபாத் ராஜவீதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. வாகன ஓட்டிகளின் சிரமமும் தொடர்வதால், பைபாஸ் சாலைக்கான பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை -- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது;

வாலாஜாபாத் புறவழிச் சாலை அமைக்கும் வழி தடத்தில், புளியம்பாக்கம் மற்றும் கிதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ரயில் கடவுப்பாதைகள் உள்ளன.

இப்பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டி உள்ளது.

இதேபோன்று, வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி இருந்தது. அப்பணி சில நாட்களுக்கு முன்புதான் நிறைவு பெற்றது. அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைத்தல் பணியும் முடித்துள்ளோம்.

ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டிய இடம் அருகே, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இருபுறச் சாலை பகுதிகளிலும் அணுகு சாலை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் முடிவுற்றுள்ளது.

ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் கட்ட ரயில்வே துறையிடம் அனுமதி பெற வேண்டி இருந்தது.

அதற்கான அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து வந்த ரயில்வே அதிகாரிகள், அவ்வப்போது மேம்பாலம் அமையும் இடத்தை நேரில் ஆய்வு செய்து வந்தனர்.

சமீபத்தில்தான் ரயில் கடவுப் பாதையில் மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அடுத்த சில தினங்களில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் பணி முடிந்து புறவழிச் சாலையை பயன்பாட்டிற்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement