தப்பியோடிய கைதி மீண்டும் சிக்கினார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தபோது போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதியை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீண்டும் பிடித்தனர்.

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பவன் 27, என்பவரை போலீசார் கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவில் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்க நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர்.

சிறை வளாகத்திற்கு வந்தபோது போலீசாரை தள்ளிவிட்டு பவன் தப்பி ஓடினார்.

30 நிமிட தேடுதலுக்குப் பின்னர் சிறை அருகே சின்ன அய்யன்குளம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் தேடிப்பிடித்தனர்.

பின்னர் சிறையில் அடைத்தனர்.

Advertisement