வடமதுரையில் வியாபாரிகளாகவே அகற்றிக்கொண்ட ஆக்கிரமிப்புகள்

வடமதுரை: வடமதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கெடு முடிவதால் வியாபாரிகள் தாங்களகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

வடமதுரையில் கடந்த 2003 ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை. தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் கிடப்பில் இருந்ததால் பலரும் ரோடு விளிம்பு வரை ஆக்கிரமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தினர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோடுகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள் அதிகரித்தன. வடிகால் கட்டமைப்புகள் சீரற்றதாக மாறின.

இதுதொடர்பாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி குறிப்பிட்ட அளவு வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதென முடிவு செய்தனர். இதன்படி அரசு துறையினர் அகற்ற வேண்டிய அளவு குறியீடுகளை செய்த பின்னர் நேற்று வரை கால அவகாசம் தரப்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அவரவர்களாக நேற்று அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். நேற்று மாலை வரை பாதிக்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.

Advertisement