போக்குவரத்து ஊழியர்கள் நாளை 100 இடங்களில் உண்ணாவிரதம்

திருப்பூர்; போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து பேசி முடிக்க வலியுறுத்தி, நாளை, 100 இடங்களில், 12 மணி நேர உண்ணாவிரதம் இருக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆயத்தமாகி வருகிறது.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும், டிரைவர், நடத்துனர் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, 2024 ஆகஸ்டில் நடந்தது; முடிவு எட்டப்படவில்லை. புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சை விரைந்து பேசி முடிக்க வேண்டும்; மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், முழுமையாக ஒப்பந்த தொகை வழங்க வேண்டும். சமமாக அகவிலைப்படி, 22 மாத ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை(27ம் தேதி), கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், போக்குவரத்து கிளை, மண்டல அலுவலகம் என, 100 இடங்களில், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, 12 மணி நேர போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

ஊழியரின், வருங்கால வைப்பு நிதியை, போக்குவரத்து கழகங்கள் செலவழித்து விட்டன. பணி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன், அகவிலைப்படி தராமல், வெறும் கையுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாநிலம் முழுதும் காலிப்பணியிடம் நிரப்புவது அறிவிப்போடு நிற்கிறது. வேலைப்பளுவால் ஊழியர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். தொடர் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் பல்வேறு பகுதியில், உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

ஆறுமுகநயினார், பொதுச்செயலாளர், அரசுப்போக்குவரத்து ஊழியர் சங்கம்(சி.ஐ.டி.யு.,)

Advertisement