ரொனால்டோ '800' * கிளப் கால்பந்தில் அதிக கோல்

ஹோபப்: கிளப் கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்த முதல் வீரர் என புதிய சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
சவுதி அரேபியாவில் 'சவுதி புரோ லீக்' கிளப் கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. உலகின் முன்னணி வீரர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, இடம் பெற்ற அல் நாசர் அணி, தனது கடைசி லீக் போட்டியில் அல் படே அணியை சந்தித்தது.
இதில் அல் நாசர் அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 70 புள்ளியுடன் (34 போட்டி, 21 வெற்றி, 7 'டிரா', 6 தோல்வி) பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இப்போட்டியில் 42வது நிமிடம் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கிளப் கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.
தவிர இந்த சீசனில் 25 கோல் அடித்து 'கோல்டன் பூட்' (தங்க ஷூ) தட்டிச் சென்றார்.

சாதனை எப்படி
ரொனால்டோ, ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்காக 5 கோல் அடித்தார். அடுத்து மான்செஸ்டர் யுனைடெட் (145 கோல்), ரியல் மாட்ரிட் (450), யுவண்டஸ் (101), அல் நாசர் (99) அணிகளுக்காக என மொத்தம் 800 கோல் அடித்துள்ளார்.
அர்ஜென்டினாவின் மெஸ்சி (753 கோல்), ஆஸ்திரேலியாவின் ஜோசப் பிகான் (676), ஹங்கேரியின் பெரன்க் புஸ்காஸ் (512) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பிரேசில் அணியில்...
அமெரிக்காவில் 'பிபா' கால்பந்து கிளப் அணிகளுக்கான உலக கோப்பை தொடர் ஜூன் 15-ஜூலை 13ல் நடக்கவுள்ளது. ரொனால்டோவின் அல் நாசர் அணி இதில் பங்கேற்க தகுதி பெறவில்லை. எனினும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற அணிகளின் வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்ற விதி உள்ளது. இதன் படி, பிரேசிலின் பால்மெய்ரஸ், பிளமெங்கோ உள்ளிட்ட 4 அணிகள் ரொனால்டோவை வாங்க ஆர்வம் காட்டுகின்றன. இதனால் அல் நாசர் அணியில் இருந்து ரொனால்டோ விலகலாம்.

Advertisement